Thursday, June 11, 2009

கடவுள் இருக்கிறாரா?

ஒரு முறை பேரரசர் அக்பர், பீர்பாலிடத்தில் “கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. ஏன் கடவுள் நேரடியாக வரவேண்டும். தன்னுடைய வேலைக்காரர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பக்கூடாதா?” என்று கேட்டார். இதற்கு பீர்பால் இந்த கேள்விக்கு உடனடியாக விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். சில நாட்கள் கழித்து கங்கை நதியில் அக்பர் தன் குடும்பத்தாரோடு படகில் செல்ல பீர்பால் தானும் உடன் வருவதாகக் கூறி ஏறிக் கொண்டாராம். ஆற்றின் ஆழமான பகுதியில் படகு செல்லும் போது அக்பரின் மூன்று வயது பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அதைக் கண்டு அரச குடும்பமே அலறி துடித்தது. நிலவொளியில் இசையைய் இரசித்துக் கொண்டிருந்த அக்பர் உடனே ஆற்றில் குதித்து தனது மூன்று வயது பேரனைக் காப்பாற்றினார்.

“முட்டாளே! நீ செய்த காரியத்திற்கு உன்னை இப்போதே வெட்டிக் கொல்ல வேண்டும். இருந்தாலும் நீ என் மந்திரி ஆகையால் உன்னை விட்டு வைக்கிறேன். ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என பீர்பாலை நோக்கி அக்பர் கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பதற்றமேதுமடையாமல், அரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு கோபம் குறையாத அக்பர் குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது அரசனாக ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா? எனப் பதிலுக்கு கேட்டார். அப்போது பீர்பால், சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் அன்றைக்கு என்னிடத்தில் கேட்ட கேள்விக்கு விடை இது தான்.

கடவுள், தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், நீங்களே நீரில் குதித்துக் குழந்தையைக் காக்க நினைத்தது போல, இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.


நன்றி கொல்லிமலை ஆனந்தன்....

Thursday, June 4, 2009

காலத்தின் அருமை

                         காலத்தின் அருமை

மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து “நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்” என்று கேட்டார் போப். “ஆறு மாதம்” என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். “நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்” என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து “நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர் “ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறை… அதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்”. போப்பாண்டவர் சிரித்தபடி “ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். “நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்” என்று அழகான விளக்கம் அளித்தார்.

“பிறகு”, “பிறகு” என்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

 


நன்றி கொல்லிமலை ஆனந்தன்....

Monday, June 1, 2009

                                                  பாத்திரம் அறிதல்

உதவி வேண்டும் என்று மகாராஜாவிடம் யாசகம் கேட்க ஒரு ஞானி போனார். அவர் பிராத்தனையில் இருப்பதாகவும் ஞானி மட்டும் உள்ளே போகலாம் என்றும் அனுமதி தந்தார்கள். அரசர் “ஆண்டவரே… என் தேவைகள் பெருகி விட்டன. இன்னும் பொன்னும் மணியும் நாடும் கொடு” என்று பிராத்தனையைய் முடித்தார். உதவி கேட்டு வந்த ஞானி விருட்டென்று அரசரிடம் எதையும் கேட்காமல் வெளியே புறப்பட்டார். அரசர், “சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றபடி பின்னால் வந்தார். “வேண்டாம்… நீயே பிச்சைக்காரன்… உன்னிடம் நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். நேராகக் கடவுளிடமே பிச்சை கேட்டுக் கொள்வேன்” என்றபடி வேகமாகப் போய்விட்டார்.

கடவுள் மேல் பாரத்தைக் போட்டுவிட்டால் கஷ்டம் தெரியாது. இறைவன் தரும் இன்பம், உலகம் தரும் இன்பத்தைவிட உயர்வாகவே இருக்கும்.

நன்றி.... கொல்லிமலை ஆனந்தன்....